மத்தியில் பிஜேபி ஆட்சியில் அமர்ந்தது முதல் பிரதான திராவிட கட்சிகளில் இஸ்லாமிய வேட்பாளர்களின் எண்ணிக்கை அருகி வருவதை காண முடிகிறது.
அதேவேளையில் கூட்டணி கட்சிகள் மூலமாவது இஸ்லாமியர்கள் வேட்பாளராக நிறுத்தவும் வாய்ப்பளிக்காமல் பாஜகவை காரணம் காட்டி அங்கும் போதிய பிரதிநிதித்துவம் என்பதும் மறுக்கப்பட்டு வருகின்றது. பாஜகவை காரணம் காட்டி சிறுபான்மை மக்களின் காவலனாக காட்டிக்கொண்டு மறுபக்கம் இஸ்லாமியர்களுக்கு அதிகார பகிர்வை மறுப்பது என்பது பாஜகவின் செயல்திட்டத்தை வேறொரு வழியில் செயல்படுத்துவதாகவே அறிய முடிகின்றது.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் 2 இஸ்லாமிய வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர் என முகநூல் முழுவதும் பொங்கியெழுந்தவர்கள், இன்றைக்கு திமுக 3 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்துள்ளது குறித்து மவுனம் காக்கின்றனர்.
இதில் இன்னொரு ஆபத்தும் உள்ளதை நாம் உணர வேண்டும். அதாவது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக அல்லது கனிசமாக உள்ள தொகுதிகள் அனைத்திலும் இஸ்லாமியர் அல்லாத வேட்பாளருக்கு வாய்ப்பளித்து அங்கு திமுக போட்டியிடுகின்றது.
அதேவேளையில் கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சிகளுக்கு அந்த இடங்கள் மறுக்கப்பட்டுள்ளன. நாளடைவில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பாக இருக்கும் தொகுதிகள் (உதா: துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அரவக்குறிச்சி, ஆம்பூர், இராமநாதபுரம்….. ) முற்றுமுழுதாய் பறிக்கப்பட்டு விடும் ஆபத்தும் உள்ளது.
அதிகாரத்தை நோக்கி பயணிப்போம் என்று அழைப்பு விடுத்தால், அதிகாரத்திற்கு அலை பாயாமல் ஒருங்கிணைவோம் என்ற சப்பைக்கட்டுகள் இந்த தேர்தலில் முழக்கமாக எழுப்பப்படுகின்றன.