பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா வைரசின் தாக்கமும், அதனால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளும் குறையத் தொடங்கியதாலும், தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்ததாலும், இந்த பெருந்தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உலக மக்கள் நிம்மதி பெரும்மூச்சுவிட்ட நிலையில், புதியவகைஉருமாறிய கொரோனா பரவத் தொடங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த வீரியமிக்க வைரஸ் பரவி வருகிறது. தற்போது வளர்சிதை மாற்றமடைந்துள்ள வைரஸ் முந்தைய வைரசை விட 70 சதவிகிதம் வேகமாக பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளன.

சமீபத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வகையில், இதுவரை 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 11 பேருக்கும், அமிர்தசரசில் 8 பேருக்கும், கொல்கத்தாவில் 2 பேருக்கும், சென்னையில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்புடைய நபர்கள், விமானத்தில் பயணித்த மற்ற நபர்களையும் கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பிரிட்டனில் இருந்து திரும்பியபின்னர் தொற்று கண்டறியப்பட்ட 22 பேருக்கும் புதியவகை உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதா? என தெரியவில்லை. அதனை கண்டறிவதற்காக அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் சளி மாதிரிகள், அடுத்தகட்ட பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள தேசிய தொற்றுநோய் கட்டப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!