அசாமில் விருந்தில் பிரியாணி சாப்பிட்ட 145 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டம் திபு மருத்துவக் கல்லூரியில் 9-ம்தேதி நடந்த அரசு விழாவில் முதல்–மந்திரி சர்வானந்த சோனோவால், சுகாதார அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. பிரியாணி சாப்பிட்டவர்களில் பலருக்கு வாந்தியும் வயிற்றுவலியும் ஏற்பட்டது. 9-ம்தேதி இரவு முதல் 145 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்களில் 28 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 117 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சுகாதார மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
விழாவில் பிரியாணி சாப்பிட்ட தனக்கும் வயிற்றுவலி ஏற்பட்டு இப்போது சரியாகிவிட்டதாக சர்மா கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்பி ஆங்லாங் மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் சந்திர த்வஜா சின்கா தெரிவித்தார்.