புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாராயணசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேல் 6 மாதங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான் குமார் ஆகியோர் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் 30 பேர் கொண்ட புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நாராயணசாமி பெரும்பான்மையை சட்டசபையில் 22-ந்தேதி (இன்று) நிரூபிக்க வேண்டும் என்று புதிதாக கவர்னர் பொறுப்பை ஏற்ற டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன், தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் சட்டசபையில் நாராயணசாமி அரசின் பலம் 12ஆக குறைந்தது. இதுதொடர்பாக நேற்று மாலையும், இன்று காலை 8 மணிக்கும் நாராயணசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. முதல்–மந்திரி நாராயணசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது அவர் உரையாற்றினார்.
புதுவையில் காங்கிரஸ்– தி.மு.க. கூட்டணி ஆட்சி சோனியா காந்தி, கருணாநிதியின் ஆசியாலும், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் பேராதரவாலும் நடந்து வருகிறது.
நான் முதல்–அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணியை செய்து வருகிறார்கள். இடைத்தேர்தலில் நான் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ், தி.மு.க.வின் ஆதரவோடு வெற்றிபெற்றேன்.
அதன்பிறகு 3 தேர்தல்களை நான் சந்தித்துள்ளேன். அதில் முக்கியமானது 2019 பாராளுமன்ற தேர்தல். நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது 70 சதவீத வாக்குகளை அந்த தொகுதி மக்கள் அளித்து என்னை வெற்றிபெற வைத்தார்கள்.
அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளித்து எங்களது காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அதேபோல கூட்டணி கட்சியை சேர்ந்த வெங்கடேசன் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் அமோக வெற்றிபெற்றார். எங்கள் அணியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் இருந்தன. எதிர் அணியில் என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா ஆகியவை ஒருங்கிணைந்து தேர்தல் பிரசாரம் செய்தன. ஆனாலும் எங்கள் அணி வெற்றிபெற்றது.
இது புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. புதுச்சேரி மாநில மக்களுடைய ஆதரவோடும், ஒத்துழைப்போடும் இங்கு அமர்ந்து இருக்கின்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேராதரவோடு தொடர்ந்து நாங்கள் மக்கள் நல திட்டங்களை புதுச்சேரி மாநிலத்தில் நிறைவேற்றி வருகிறோம்.
மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய நிதி கிடைக்கவில்லை. மற்றொரு புறம் மத்திய அரசின் நெருக்கடி, இன்னொரு புறம் கிரண்பேடியை துணை நிலை ஆளுநராக நியமித்தது புதுச்சேரி அரசுக்கு தொல்லை.
இன்னொரு புறம் மத்திய அரசின் ஆட்சி கவிழ்ப்பு வேலை. புதுச்சேரி மாநில மக்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருந்தாலும் 5 ஆண்டுகளை நிறைவு செய்த அரசு காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் இருப்பது 5 நாளோ, 10 நாளோதான்.
ஆனால் எதிர்க்கட்சிகள் தங்களது வேலையை பல ஆண்டுகாலம் காட்டினார்கள். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. இப்போது அஸ்திரத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். நான் எங்களுடைய ஆட்சியில் 4 ஆண்டுகால சாதனைகளை, செயல்பாடுகளை பத்திரிகைகளில் விளம்பரமாக கொடுத்தேன். இருந்தாலும் கூட புதுச்சேரி மாநில மக்களுக்கு அதை நிறைவேற்றும் விதமாக சிலவற்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.
கடந்த ஆட்சி காலத்தில் விட்டுவிட்டு சென்ற திட்டங்கள், நிறைவேற்றாமல் சென்ற திட்டங்கள், அடிக்கல் நாட்டாமல் சென்ற திட்டங்கள் எல்லாவற்றையும் நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.
புதுச்சேரியில் 4 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு 3 திறக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உப்பனாறு பாலம் 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது.
காரைக்கால் தொகுதியில் நீதிமன்ற வளாகம் நாங்கள் திறந்து இருக்கிறோம். கடற்கரை சாலையில் நீதிபதிகள் தங்கும் விடுதியை புனரமைத்து திறந்து இருக்கிறோம். புதுச்சேரி மாநிலத் தில் வரலாறு காணாத வகையில் 120-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து இருக்கிறோம்.
கொரோனா காலத்தில் எங்கள் அரசின் பணிகள் பாராட்டுக்குரியது. உயிரை பணயம் வைத்து அமைச்சர்கள், காங்கிரஸ்– தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், செயல்பட்டதை புதுச்சேரி மாநில மக்கள் அறிவார்கள். நாராயணசாமி பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து நாராயணசாமி உள்பட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து புறக்கணிப்பு செய்தனர். பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்று கூறியபடி வெளியேறினார்கள்.
இதையடுத்து சபாநாயகர் சில உத்தரவுகளை வெளியிட்டார். நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. அவர் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என்று சபநாயகர் தெரிவித்தார்.