புயலை கையாள அரசு பாடம் கற்றுள்ளது; ஆனாலும் சிறப்பாக இல்லை: கமல்

புயலை கையாள்வதில் அரசு பாடம் கண்டுக் கொண்டுள்ளது; எனினும், பணிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று, மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நிவர் புயலால் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களை, மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை சைதாப்பேட்டை டீச்சர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அத்துடன், மக்கள் நீதிமய்யம் சார்பில், நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: இந்த பகுதி மக்கள், 50 ஆண்டுகளாக இங்கேயேதான் வசிக்கிறார்கள். பேரிடர் நாட்களில் உணவு, உடைகள் தருவது மட்டுமே இதற்கு தீர்வல்ல.

இந்த மக்களுக்கு நிரந்தரமான, பாதுகாப்பான இடங்களை அரசு வழங்க வேண்டும். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை. நிவாரணம் என்பது அந்தந்த வருடத்திற்குள் முடிந்துவிடும். எனவே, நிரந்தரமான நிவாரணம் அளிக்க வேண்டும்.

பல உயிர் சேதங்களுக்குப் பிறகு, இந்த பேரிடரை அரசு கையாள பாடம் கற்றுக்கொண்டுள்ளது. இந்த வருடம் சென்னை கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், சிறப்பாக இருந்ததா என்றால் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார்.

Translate »
error: Content is protected !!