புயல் எதிரொலி: சென்னையில் கனமழை! 7 மாவட்டங்களில் பஸ் சேவை முற்றிலும் ரத்து

நிவர் புயல் காரணமாக, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், நாளை தீவிர புயலாக மாறுகிறது; அடுத்த நாள் தமிழகத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் எதிரொலியாக, சென்னை உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றம் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி சென்னை நகரின் பல்வேறு பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

நிவர் புயலை முன்னிட்டு 7 மாவட்டங்களில் நாளை(நவ.24) நண்பகல் ஒரு மணி முதல் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்படும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து சேவை ரத்து செய்யப்படுகிறது.

நிவர் புயல் எதிரொலியாக வரும் 24 மற்றும் 25 தேதிகளில் சென்னை – தஞ்சாவூர், சென்னை – திருச்சி மற்றும் மறுமார்க்கமாக இயங்கும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்கிடையே, புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து அரோக்கோணத்திலிருந்து புறப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 120 பேர் இன்று கடலூர் சென்றடைந்துள்ளனர். மழை மற்றும் புயலால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் அவர்கள் உடனடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

Translate »
error: Content is protected !!