புயல் எதிரொலி: தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை

நிவர் புயல் காரணமாக, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தமிழகத்தில் நாளை (நவ.25) பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, புயல் பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து, மாநிலப் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு நடத்தினார்.

அதன்பின், நிருபர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, புயல் நேரத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது. பாதுகாப்பு கருதி, ஏழு மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், புயல் காரணமாக, மாநிலம் முழுவதும் நாளை பொது விடுமுறை விடப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தேவையான இடங்களுக்குச் சென்றுள்ளன.

ஏரிகள் நிரம்பி வருகின்றன. ஏரிகளைப் பராமரிக்க ஊழியர்கள், அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். ஏரி உடைப்பு ஏற்பட்டால் சரி செய்யவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்றார்.

Translate »
error: Content is protected !!