பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு!

டெல்லியில் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, போராட்டத்தை தொடர்வதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை கடந்த 6 நாட்களாக நடத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ள இப்போராட்டம், இந்தியாவை கடந்து உலக அளவில் பல நாடுகளின் கவனத்தை பெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்த விவசாயிகள் டெல்லி அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் கலைக்க முயன்றனர். பின்னர், விவசாயிகளின் உறுதியை கண்டு அரசு பணிந்தது. டெல்லியில் 2 இடங்களில் போராட்டம் நடத்த அரசு அனுமதி வழங்கியது.

மறுபுறம், மத்திய அரசு டிசம்பர் 3ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது. பின்னர், இன்றே பேச்சு நடத்தலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. முதலில் இதை நிராகரித்த விவசாயிகள் குழு தலைவர்கள் பின்னர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

அதன்படி, டெல்லியில் இன்று 35 விவசாய குழுக்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய அரசு சார்பில் வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மற்றும் வர்த்தக கைத்தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய, குழுவை அமைக்கலாம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை, விவசாயிகள் நிராகரித்தனர். முடிவில் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து, டிசம்பர் 3 அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையே பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று விவசார்யிகள் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!