சென்னை,
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டப் பொருள்களை தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக சட்டப் பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சட்டப் பேரவை உரிமைக்குழுவின் நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது.
எனினும் தவறுகளை களைத்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, உரிமைக்குழு கூடி மீண்டும் அனுப்பிய இரண்டாவது நோட்டீஸை எதிர்த்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ–க்களும், தி.மு.க. விலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கு.க செல்வமும் வழக்கு தொடர்ந்தனர். (திமுக எம்எல்ஏக்கள் தரப்பில் ஜெ.அன்பழகன், கே.பி.பி. சாமி ஆகியோர் இறந்து விட்டனர்)
அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு 2020 ஆகஸ்ட் 25ம் தேதி இடைக்கால தடை விதித்தார். இந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி விசாரணை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு நடைபெற்றது.
சட்டப்பேரவை செயலாளர் சார்பில் அரசின் மூத்த வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி வாதிட்டார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உரிமைக்குழு சார்பில் ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இன்று தீர்ப்பளித்தார்.
சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீஸை ரத்து செய்து நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், 2வது நோட்டீஸும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
#Gutkha விற்பனையைச் சுட்டிக்காட்ட பொட்டலங்களை சட்டசபையிலேயே காண்பித்தோம்.
கமிஷன் வாங்குகிறவர்கள் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்; தடை போட்டது உயர்நீதிமன்றம்.
2வது நோட்டீசும் இன்று ரத்து!
இந்த வேகத்தை குட்கா தடுப்பில் அரசு காட்டியிருக்கலாமே?!
குட்கா அரசின் ஆட்டம் முடியும்!
— M.K.Stalin (@mkstalin) February 10, 2021