சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு இன்னும் 10 நாட்கள் மட்டும் உள்ளது. இதனால் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை கொண்டு வர வேண்டும் என்பதிலும், ஒரு ஓட்டு கூட விட்டுப் போய் விட கூடாது என்பதிலும் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது.
இதனால் 100 சதவீத ஓட்டுப்பதிவை சாத்தியமாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தீரவிமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் கொரோனா பரவல் வேறு தீவிரமடைந்து வருவதால், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக முதியவர்கள் தபால் ஓட்டு செலுத்தலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
இதன்படி இதுவரை தபால் ஓட்டு போட லட்சக் கணக்கான முதியவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் சரிதானா என்பதை தேர்தல் அதிகாரிகள் சரி பார்த்து, வீட்டிற்கே சென்று அவர்களின் ஓட்டுக்களை பெற்று வருகின்றனர். தபால் ஓட்டிற்காக விண்ணப்பித்த முதியவர்கள் பற்றிய விபரங்கள், அவர்கள் ஓட்டளிப்பதை சரி பார்க்க 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ கண்காணிப்பாளர், பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய இந்த குழுவினர் விண்ணப்பித்தவரின் வீட்டிற்கு நேரில் சென்று ஓட்டுக்களை பெற்று வருகின்றனர். எந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இல்லாமல், வீட்டின் ஒரு பகுதியில் தடுப்புக்கள் அமைத்து, ஓட்டுப் பெட்டி வைக்கப்பட்டு , தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் 13 ஏ படிவம், தபால் ஓட்டிற்கு விண்ணப்பித்த நபரின் வீட்டிற்கே சென்று கையெழுத்து பெறப்படுகிறது.
அவர்களின் வாக்காளர் அட்டை சரி பார்க்கப்பட்ட பிறகு, வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய சீட்டு, அளிக்கப்பட்டு, ஒட்டளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதிகாரிகளின் கண் எதிரே முதியவர்கள் ஓட்டளித்தாலும், இந்த நடைமுறைகள் அனைத்தும் வீடியோப்பதிவு செய்யப்படுகிறது. 80 வயதிற்கு மேற்பட்ட 12.91 லட்சம் மூத்த வாக்காளர்களுக்கு வீட்டில் இருந்தே ஒட்டளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதுவரை 1.59 லட்சம் பேர் தபால் ஒட்டை செலுத்தி உள்ளனர். பல மூத்த வாக்காளர்களின் வீட்டிற்கே சென்று ஓட்டுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதிகாரிகள் யாரும் தங்களை அனுகவில்லை என சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.