மதுரை,
தலைவர்களை உற்சாகப்படுத்துவது தொண்டர்களின் முழக்கம்தான். அடிமட்ட தொண்டர்களின் முழக்கமும் வாழ்க கோஷமும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். வருங்கால முதல்வரே வாழ்க என்ற கோஷத்தை அதிகம் கேட்டிருப்போம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த சசிகலாவைப் பார்த்த அமமுக தொண்டர் ஒருவர் மூன்று முதல்வர்களை உருவாக்கிய தியாகத்தலைவி சின்னம்மா என்று வித்தியாசமாக முழக்கமிட்டு அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.
சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கினாலும் அரசியல் அவரை விட்டு ஒதுங்காது போல. அரசியல் துறவறம் பூண்ட சசிகலா ஆன்மீக பயணம் கிளம்பி விட்டார். குல தெய்வ கோவிலில் தொடங்கிய பயணம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை தொடர்கிறது. சசிகலா போகும் இடங்களில் எல்லாம் அமமுக தொண்டர்கள் கூடுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களும் நேரடியாகவே சந்தித்து பொன்னாடை அணிவித்து ஆசி பெறுகின்றனர். ஞாயிறன்று பவுர்ணமி தினத்தில் ராமேஸ்வரம் சென்ற சசிகலா திருப்புல்லாணி சென்று பெருமாள் கோவிலில் வழிபட்டார். திங்கட்கிழமையன்று அதிகாலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஸ்படிக லிங்க பூஜை செய்து வழிபட்டார்.
ராமேஸ்வரம் சிவ ஆலயம் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். ராவணனைக் கொன்ற பாவம் தீர ஸ்ரீராமர் இங்கே வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம். ராமநாதசுவாமி ஆலயத்தின் கருவறையில் உள்ள ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் காலை 5 முதல் 6 மணி முடிய சிறப்பு தரிசனம் நடைபெறும்.
இது வேறு எந்தத் தலத்துக்கும் இல்லாத சிறப்பாகும். இந்த ஸ்படிக லிங்கத்தைத் தரிசனம் செய்து வழிபட்டால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம் என்றும் பித்ருக்களின் ஆசீர்வாதத்துடன் சந்ததி பலத்துடன் வாழலாம் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். தோஷங்கள், சாபங்கள் நீங்க ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்று வழிபட்டுள்ளார் சசிகலா. ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பிய சசிகலா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மாலையில் வந்தார்.
மீனாட்சிக்கு பிடித்தமான பச்சைப்புடவை கட்டி கோவிலுக்கு வந்திருந்தார் சசிகலா. அப்போது கூடியிருந்த அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்த உற்சவம் நடைபெறுகிறது. சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற சசிகலா மீனாட்சி சுந்தரேஸ்வரரை மனமுருகி வழிபட்டார். கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பின்னர் காரில் ஏறி கிளம்பும் முன்பாக கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு கையசைத்தார்.
அதனைப் பார்த்து உற்சாக மிகுதியில் ஒரு தொண்டர் மூன்று முதல்வர்களை உருவாக்கிய தியாகத்தலைவி சசிகலா என்று உற்சாக முழக்கமிட்டார். தொண்டரின் உற்சாக முழக்கம் பலரது கவனத்தையும் கவர்ந்தது. இது வித்தியாசமான முழக்கமாக இருக்கே என்று யோசித்த தொண்டர்கள் பலரும் இதை யாருமே யோசிக்கலையே என்று பேசிக்கொண்டனர். வடிவேலுவும் லிவிங்ஸ்டனும் ஒரு படத்தில் முழக்கமிட ஆள் வைத்திருப்பார். அப்போது ஒருவர் வருங்கால ஜனாதிபதி வாழ்க என்று முழக்கமிடுவார். குடுக்கிற காசை விட அதிகமாக கூவுறானேடா என்று ஆனந்த கண்ணீர் விடுவார் லிவிங்ஸ்டன். அதுபோல நேற்று ஒரு அமமுக தொண்டர் சசிகலாவைப் பார்த்து முழக்கமிட்டது பலரது கவனத்தையும் கவர்ந்தது.