சென்னை,
மத்திய பாஜக அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றும், இதனால் பேரழிவை நாடு சந்திக்க இருப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இதுவரை எப்போதும் இல்லாத உச்சத்தை சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு லட்சதை நெருங்கியும் லட்சத்தை கடந்தும் உள்ளது. நேற்று முன்தினம் ஒரு லட்சத்தது 15 ஆயிரம் என்று இருந்த பாதிப்பு நேற்று ஒரு லட்சத்து 26 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர். கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழகம், பஞ்சாப், குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது. இதேபோல் 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பினையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்பதிவு செய்வது கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம். மத்திய பாஜக அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், சர்வதே தடுப்பூசி அளிக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. பல முதல்வர்கள் உலகளாவிய தடுப்பூசி கோரியுள்ளனர். ஆயினும் உலகளாவிய தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய அரசு நிராகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
எந்தவொரு முன் பதிவு இல்லாமல் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி என்பது காலத்தின் தேவை. மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சிதம்பரம், பேரழிவை நாடு சந்திக்க இருப்பதாக எச்சரித்துள்ளார். மேலும், மோடி அரசை போல், ஜனநாயக விரோத அரசு உலகில் இல்லை என்றும் கடுமையாக கூறியுள்ளார்.