தமிழகத்தில் டெல்டா வைரஸ் மரபியல் அணு பரிசோதனை விரைவாக நடத்த ஏதுவாக மாநில அரசு சார்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில், சென்னை டி.எம்.எஸ்( மருத்துவ பணிகள் சேவை இயக்குனரகம் ) வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரபணு ஆய்வகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் செல்வ விநாயகம், மருத்துவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்..
டெல்டா பிளஸ் வைரசை கண்டறியும் ஆய்வகங்கள் பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உள்ளதால்,தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் மாதிரிகளை சோதனை செய்து முடிவுகள் பெறுவதில் காலதாமதமும், அதிக செலவும் ஏற்படுகிறது. எனவே, தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரசை கண்டறியும் ஆய்வகம் அமைக்க வேண்டு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதன்படி, தமிழகத்தில் மாநில அரசே ரூ.4 கோடி செலவில் ஆய்வகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கருவிகளும் வாங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மரபணு ஆய்வகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதற்கான 5 வல்லுநர்கள் பெங்களூரு சென்று அங்குள்ள ஆய்வகத்தில் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இனி வரும் காலங்களில் தமிழகத்தில் எந்த பகுதியில் இருந்தும் மாதிரிகளை எடுத்து விரைவில் பரிசோதனை முடிவுகளை பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.