மராட்டிய மாநிலத்தில் ஒரே பள்ளியில் 186 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தற்போது சில மாநிலங்களில் மட்டும் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. மராட்டியம், கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உருமாறிய கொரோனாவால் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மராட்டிய மாநிலத்தில் உள்ள அம்ராவதி, அகோலா, யவத்மால் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. புனே, நாசிக் ஆகிய மாவட்டங்களில் இரவு நேரத்தில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் ஒரே பள்ளியில் 186 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாசிம் மாவட்டத்தில் உள்ள பள்ளியின் விடுதியில் 186 மாணவர்களுக்கு கொரோனா இருப்பதற்கான பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது.
மேலும் 4 ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான மாணவர்களில் பெரும்பாலானோர் அம்ராவதி மற்றும் யவத்மால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இதைத்தொடர்ந்து அந்த பள்ளி இருக்கும் பகுதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 8,800 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 மாதத்தில் இது அதிக அளவிலான பாதிப்பு ஆகும்.
நேற்று ஒரே நாளில் 80 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 21 லட்சத்து 21 ஆயிரத்து 119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 51 ஆயிரத்து 937 பேர் இறந்துள்ளனர். இதற்கிடையே மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசும், மும்பை போலீசும் எச்சரிக்கை விடுத்துள்ளன.