கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று, தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்புக்குரலை பதிவு செய்து வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, “800” என்ற படத்தை ஸ்ரீபதி என்பவர் இயக்க, முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர், நேற்று வெளியான நிலையில், படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
ஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரில் இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசிய முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில், தமிழ் உணர்வாளராக தன்னை காட்டிக்கொள்ளும் விஜய் சேதுபதி எப்படி நடிக்கலாம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் தாமரை, சீமான் என பலரும், இப்படத்தில் நடிக்கும் முடிவை திரும்பப்பெறுமாறு, நடிகர் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், விஜய் சேதுபதி கருத்து எதையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
இந்த சூழலில், #ShameOnVijaySethupathi என்ற டிவிட்டர் ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இனிமேல் விஜய் சேதுபதி மக்கள் செல்வன் இல்லை எனவும், அவரது படங்களை புறக்கணிக்கப் போவதாகவும் கூறி பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். எனினும் விஜய் சேதுபதி என்ன சொல்லப்போகிறார் என்பதை, அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.