மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1ம் நாளில், தமிழ்மொழி – இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்; மதவாத சக்திகளை வீழ்த்துவோம் என்று, மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளங்குபவை மொழிவாரி மாநிலங்கள். இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழும் தேசிய இனங்களைச் சார்ந்த மக்கள், தங்கள் தாய்மொழியின் அடிப்படையில், மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியதையடுத்து, 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பல உருவாயின.
நவம்பர் 1, 1956 அன்று சென்னை மாகாணத்துடன் இருந்த திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிகள் முறையே ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த இன்றைய குமரி மாவட்டம்,தமிழ்நாட்டுடன் இணைந்தது.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகம் பெற்றவற்றை விட, இழந்தவை அதிகம். தமிழ் பேசும் மக்கள் வாழும் பல பகுதிகள் அண்டை மாநிலங்களின் எல்லைகளுக்குள் சென்றுவிட்டன. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமின்றி, தமிழகத்தின் நீர் ஆதாரம் போன்றவற்றிலும் கடுமையான – நெடுங்காலச் சிக்கல்களை உருவாக்கிவிட்டது.
இழந்தவை போக, இருப்பதைக் கொண்டு தமிழ்நாட்டைப் பொருளாதார வலிமை மிக்க மாநிலமாகவும் கல்வி – சுகாதாரம் – தொழில் வளர்ச்சி – வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகவும் உருவாக்கியதில் திமுக அரசின் பங்கு மகத்தானது.
தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயரினைச் சூட்டிப் பெருமைப்படுத்தியவர் திமுக அரசின் முதல்வராக இருந்த அண்ணா ஆவார்.
மாநில உரிமைகள் கடுமையான சவால்களைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1 ஆம் நாளில், நாம் தமிழ்மொழி – இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க நினைக்கும் மதவாத சக்திகளை வீழ்த்திட உறுதியேற்போம். மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் மீட்டெடுப்போம் என்று கூறியுள்ளார்.