மியான்மரில் தொலைக்காட்சி, இணைய தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகக் கூறி மியான்மரில் தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது.

அதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் பல்வேறு பகுதிகளில் போராடி வருகின்றனர். இந்நிலையில் மியான்மரில் உள்ள சுதந்திர ஊடகங்கள் ராணுவ ஆட்சிக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுவருவதாகக் கூறி செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இதன்காரணமாக மியான்மரில் ஒளிபரப்பாகும் வெளிநாட்டு தொலைக்காட்சிகளும் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  மேலும் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ராணுவ அரசுக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடுபவர்களுக்கு ஒரு வருட சிறைதண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணையதளங்களைக் கட்டுப்படுத்துவது மனித உரிமை மீறல் என மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Translate »
error: Content is protected !!