சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறது.
சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் இருந்து இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக அறிவித்தார். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் குறைவாக உள்ளதாலும், நிறைய இடங்களில் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதால் அடிக்கடி இங்கு வரமுடியாது என்பதாலும் இந்த சுற்றுப்பயணத்தின்போதே பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது வழக்கம்.
அதன்படி இன்று காலை பெரிய சோரகை சென்று, அங்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதன்பின்னர் காலை 11 மணியளவில் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானோர் பங்கேற்கிறார்கள். அதன்பின்னர் பிரசார வாகனத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளார். முதலமைச்சர் பிரசாரத்தை தொடங்க உள்ளதையொட்டி, அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.