முதல்வர் பழனிச்சாமியுடன் ஸ்டாலின், விஜய்சேதுபதி சந்திப்பு… காரணம் இதுதான்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி, ஆளுனர் பன்வாரிலால் புரோகித், ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு  சென்று நேரில் ஆறுதல் தெரிவித்தனர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவசாயி அம்மாள் தனது 93வது வயதில், அக்டோபர் 12ஆம் தேதி இரவு காலமானார். சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில், முதல்வரின் தாயாரது இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பல்வேறு உயர் அதிகாரிகள், பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், அதிமுக நிர்வாகிகள், முதல்வரின் சொந்த ஊருக்கு சென்று அவரிடம் இரங்கல் தெரிவித்தனர். 

இந்நிலையில், இறுதிச்சடங்கு காரியங்களை முடித்து கொண்டு 18ம் தேதி இரவு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை திரும்பினார். இதையடுத்து இன்று காலை முதல்வரின் வீட்டுக்கு சென்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின் அங்கே வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி ஆகியோர் சென்றிருந்தனர்.

முதல்வரை நேரில் சந்தித்து தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார் ஸ்டாலின். அதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாஜக தலைவர் முருகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும், முதல்வரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

Translate »
error: Content is protected !!