ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின்தான் காரணம் என்றால் என்மீது வழக்குப் போடுங்கள். சந்திப்பதற்கு நான் தயார். நீங்கள் தயாரா, நான் ரெடி, எடப்பாடி பழனிசாமி நீங்கள் ரெடியா,” என சொந்த மண்ணில் கெத்து காட்டி சவால்விட்டார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை திமுக முன்னாள் தலைவர் கலைஞர் பிறந்த மண்ணான திருவாரூரில், அதுவும் பல வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே கொண்ட தெற்கு வீதியில் தொடங்கினார்.
திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி வேட்பாளரையும் அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஸ்டாலின். பிரச்சார வேனில் நின்றபடியே பேசிய ஸ்டாலின், “திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன்.
கலைஞர் பிறந்த, கலைஞரை வளர்த்த இந்தத் திருவாரூர் மண்ணில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளேன். இந்த சுற்றுப்பயணத்தில் நான் உணரக்கூடிய உணர்வு, 234 இடங்களுக்கு 234 இடங்களையும் திமுக கைப்பற்றும். அதிமுக கூட்டணி வாஷ் அவுட் ஆகும் என்பதை நான் உணர்கிறேன். நாட்டையே குட்டிச்சுவராக்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டையே பாழாக்கி வைத்திருக்கிறார்கள்.
முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் வாய்க்கு வந்தபடி சொல்லும் அத்தனையும் பொய்யாகவே உள்ளது. ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் கலைஞர், ஸ்டாலின்தான் என முதல்வர் கூறியிருக்கிறார். ஸ்டாலின்தான் காரணம் என்றால் இந்த நான்காண்டு காலமாக என்ன பண்ணிக்கொண்டிருந்தீர்கள்? ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின்தான் காரணம் என வழக்கு போடுங்கள்.
சந்திப்பதற்கு நான் தயார். நீங்கள் தயாரா? நான் ரெடி, எடப்பாடி பழனிசாமி நீங்கள் ரெடியா?” என்றார். மேலும், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக நான்கு வருடங்களாக விசாரணை கமிஷன் நடந்து வரும் நிலையில் இதுவரை உண்மை வெளிவரவில்லை. ஏழெட்டு முறை துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு விசாரணை கமிஷனுக்கு வரச்சொல்லி கடிதம் அனுப்பியும் இதுவரை அவர் செல்லவில்லை. ஜெயலலிதாவிற்கும் நமக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இறந்துபோனது ஒரு முதலமைச்சர். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜெயலலிதாவின் மரணத்தைக் கண்டுபிடிப்போம்” என்றார்.