முரளிதரன் மீண்டும் அறிக்கை! மவுனம் கலைத்தார் விஜய் சேதுபதி

தனது  வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு, நன்றி வணக்கம் என்று,   விஜய் சேதுபதி பதில் அளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து, ‘800’ என்ற தமிழ் திரைப்படம் தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. இதில், முரளிதரனின் பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, போஸ்டரும் வெளியானது. 

ஆனால், தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் முரளிதரன், எனவே இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என்று, தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  ட்விட்டரிலும் #shameonvijaysethupathy என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்த முத்தையா முரளிதரன், இலங்கையில் பிறந்தது தனது தவறா என்று கேட்டு நீண்டதொரு விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில்,  முத்தையா முரளிதரன் தரப்பில் இன்று மீண்டும் ஒரு அறிக்கை வெளியானது. 

அதில்,  “என்‌ மீதுள்ள தவறான புரிதலால்‌ ‘800’ படத்திலிருந்து விலக வேண்டும்‌ என நடிகர்‌ விஜய்‌ சேதுபதிக்கு சில‌ர் கடும் அழுத்தம்‌ தருகின்றனர். என்னால்‌ தமிழ்‌நாட்டின்‌ ஒரு தலைசிறந்த கலைஞன்‌ பாதிப்படைவதை நான்‌ விரும்பவில்லை. 

அது மட்டுமல்லாது விஜய்‌ சேதுபதியின்‌ கலைப் பயணத்தில்‌ வருங்காலங்களில்‌ தேவையற்ற தடைகள்‌ எற்பட்டுவிடக்கூடாது. எனவே,  இத்திரைப்படத்திலிருந்து விலகிக்‌ கொள்ளுமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறேன்‌.

ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும்‌ தடைகளால்‌ ஒருபோதும்‌ நான்‌ சோர்ந்து விடவில்லை. அவற்றை எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால்‌ எட்ட முடிந்தது. இத்திரைப்படம்‌ எதிர்காலத் தலைமுறையினருக்கும்‌ இளம்‌ கிரிக்கெட்‌ வீரர்களுக்கும்‌ ஒரு உத்வேகத்தையும்‌ மன உறுதியையும்‌ அளிக்கும்‌ என எண்ணியே எனது சுயசரிதையைத் திரைப்படமாக்கச் சம்மதித்தேன்‌. அதற்கும்‌ இப்போது தடைகள்‌ ஏற்பட்டுள்ளன .

நிச்சயமாக இந்தத் தடைகளையும்‌ கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில்‌ கொண்டு சேர்ப்பார்கள்‌ என நம்புகிறேன்‌. இதற்கான அறிவிப்பு விரைவில்‌ வரும்‌ என தயாரிப்பு நிறுவனம்‌ என்னிடம்‌ உறுதி அளித்துள்ள நிலையில்‌, அவர்கள்‌ எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளுக்கும்‌ உறுதுணையாக இருப்பேன்‌” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் இதுவரை மவுனம் சாதித்து வந்த நடிகர் விஜய் சேதுபதி, இந்த அறிக்கையை டேக் செய்து, “நன்றி வணக்கம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனவே, விஜய் சேதுபதி ‘ 800’ திரைப்படத்தில் இருந்து விலகுவது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!