மோடி வந்தால் போதும்.. மொத்தமாக அதிமுகவின் வாக்கு வங்கி சரிகிறது.. ஸ்டாலின் விமர்சனம்.. பரபர பேச்சு

குமரி,

தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும்போதெல்லாம் அதிமுக கூட்டணியின் வாக்குகள் குறைகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் நேற்று பிரதமர் மோடி தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜக தமிழக தலைவர் எல். முருகனை அதிகரித்து மோடி பிரச்சாரம் செய்தார். இதில் திமுகவை கடுமையாக தாக்கி பிரதமர் மோடி பேசி இருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் தமிழக பிரச்சார பயணத்தை திமுக தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று கன்னியாகுமரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும்போதெல்லாம் அதிமுக கூட்டணியின் வாக்குகள் குறைகிறது. மோடி பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணிக்கு வாக்குகள் சரிகிறது.

பிரதமர் மோடி அதிமுக கூட்டணியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் இருக்கிறார்.அதிமுக மக்களுக்கு எதுவும் நல்லது செய்யவில்லை. இதனால் கடந்த 10 ஆண்டு ஆட்சி குறித்து பேசாமல், திமுக மீது மோடி புகார் வைக்கிறார். குமரி மீனவர்கள் தாக்கப்படுவது இல்லை என்று வடிகட்டிய பொய்யை மோடி கூறுகிறார். குமரி மாவட்டத்தை அதிமுக அரசு புறக்கணித்துவிட்டது.

இங்கிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் தேர்வாகவில்லை என்றதும் முதல்வர் அப்படியே இந்த மாவட்டத்தை புறக்கணித்துவிட்டார்.இதை முதல்வரே தனது பிரச்சாரத்தில் ஒப்புக்கொண்டுவிட்டார் . குமரியில் அதிமுக எம்எல்ஏக்கள் இல்லாததால் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை என்று அவரே ஒப்புக்கொண்டு விட்டார்.

குமரியை ஆளும் கட்சி புறக்கணித்துவிட்டது என்று முதல்வரே வாக்குமூலம் கொடுத்துவிட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் குமரியில் செய்யப்படாமல் தடைபட்டு போன வளர்ச்சி பணிகளை துரிதமாக மேற்கொள்வோம். இங்கு கண்டிப்பாக திமுக ஆட்சியில் துறைமுகம் கொண்டு வர மாட்டோம்.

ஆனால் பாஜகவோ மத்திய துறைமுகத்தின் டெண்டரை வெளியிட்டுவிட்டு, தற்போது துறைமுகம் கொண்டு வர மாட்டோம் என்று பொய் சொல்கிறது. தேர்தலில் வெற்றிபெற்றால் ரகசியமாக துறைமுக பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள். பாஜகவின் பொன். ராதாகிருஷ்னன் பொய்களை அடுக்கி வருகிறார். இப்போது துறைமுகம் கொண்டு வர மாட்டோம் என்று கூறிவிட்டு, பின் தேர்தலுக்கு பின் கொண்டு வருவார்கள்.

இவரை பொன் ராதாகிருஷ்னன் என்று சொல்வதற்கு பதிலாக பொய். ராதாகிருஷ்ணன் என்றுதான் கூற வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் குமரி தொகுதிக்கான நலத்திட்டங்கள் செய்யப்படும், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!