நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்ததுமே தமிழகத்தில் ரசிகர்கள் அவரை கொண்டாடத் தொடங்கி விட்டனர். அவர் எங்கே வரப்போகிறார், வரவே மாட்டார் என்ற விமர்சனங்களுக்கு இந்த அறிவிப்பு மூலம் ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜினியின் இந்த அறிவிப்பு ஆளுங்கட்சியான அதிமுகவுக்கும், எதிர்க்கட்சியான
திமுகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் ‘ரஜினியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உள்ளது’ என துணை முதல்வர் ஓபிஎஸ்சும், ‘முதலில் அவர் கட்சி தொடங்கட்டும், பிறகு பார்க்கலாம்’ என திமுக தலைவர் ஸ்டாலினும் தங்களது
கருத்துக்களை தெரிவித்தனர். ஆன்மிக அரசியல் என அறிவித்த ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பாஜகவைச் சேர்ந்த அர்ஜுன மூர்த்தியை அறிவித்ததுமே ரஜினி பாஜகவைச் சார்ந்து செயல்படுவாரோ என்ற எண்ணோட்டமும் மக்களிடையே வந்து விட்டது.
ரஜினி கட்சி தொடங்கிய பிறகு என்ன செய்யப்போகிறார். தொடங்குவதற்கு முன்பு அதற்கான என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். யாரையெல்லாம் சந்திக்கிறார் என்பன போன்ற ஒவ்வொரு
நடவடிக்கையையும் அனைத்து ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் நுண்ணியமாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் ரஜினியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு
செய்யும் பணியை தமிழக உளவுத்துறை காவல் பிரிவு இப்போதே தொடங்கியுள்ளதாம். எஸ்பி ஒருவரது நேரடி கண்காணிப்பில் டிஎஸ்பி தலைமையில் ஒரு டீமும், தமிழக அளவில் ரஜினிக்கு உள்ள ஆதரவு, எதிர்ப்பு குறித்து கண்காணிப்பதற்கு மாவட்ட அளவில் தனி உளவுப்பிரிவும் தொடங்கப்பட்டுள்ளதாம். ரஜினியின் தேர்தல் வியூகம் எப்படி இருக்கும், மேலும் அவரது பிரசார ஸ்டைல் மற்றும் தேர்தல் அறிக்கை தொடர்பாக அவர் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்போகிறார் என்பது குறித்த பல்வேறு அம்சங்களையும் உளவுப்பிரிவு போலீசார் கண் கொத்திப்பாம்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறார்களாம்.