காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2 கோடி பேரின் கையெழுத்து பிரதியை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியது, விவசாயிகளுக்கு முன்னர் எந்த சக்தியும் நிற்க முடியாது. யாரை பயங்கரவாதிகள் என அழைக்கிறீர்களோ, அவர்கள்தான் இந்த நாட்டிற்கு வளம் அளிப்பவர்கள். நாடு ஆபத்தான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. ஜனநாயகம் இல்லாத சூழல் உருவாகி உள்ளது.
மொத்த அரசும் வெறும் மூன்று நான்கு நபர்களுக்காக மட்டுமே இயங்கி வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக நிற்க முயற்சிப்பவர்கள் பயங்கரவாதிகள் என அழைக்கப்படுகிறார்கள். அது விவசாயிகளாக இருந்தாலும், தொழிலாளர்களாக இருந்தாலும், ஏன் மோகன் பகவத்தாக இருந்தாலும் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுவார்கள். சீன படைகள் இன்னும் எல்லையில் உள்ளன. இந்தியாவின் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நிலத்தை பறித்துள்ளனர். பிரதமர் ஏன் இதைப் பற்றி பேசவில்லை? ஏன் அமைதியாக இருக்கிறார்?