வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவோம் என தேவேந்திர குல மக்கள் முன்னேற்ற பேரவை. நிறுவனத் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் கூறினார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,இவ்வாறு தெரிவிற்றார்.
மேலும் அவர் கூறியதாவது: தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை நயவஞ்சகமாக நம்ப வைத்து பாஜக., அதிமுக., ஏமாற்றி வருகிறது. தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு தேர்தல் நேரத்தில் அறிவித்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பிற சமூகத்திற்கு அள்ளி, அள்ளி கொடுத்து அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தி கொள்கின்றன.
எங்கள் சமூகத்திற்கான எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை. தொடர்ந்து ஏமாற்றப்படுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதனால் பாஜக வுக்கு எதிரான நிலைப்பாட்டை தேவேந்திர குல மக்கள் எடுக்க முடிவு செய்து விட்டனர்.
பிரதமர் மோடியை எந்தளவிற்கு நம்பியிருந்தோமோ அந்தளவிற்கு ஏமாற்றி விட்டார். இந்த ஏமாற்றத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி நீங்கலாக, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் தேவேந்திர குல மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
தேவேந்திர குல சமூகத்தை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு எந்த உதவியும் செய்யாத அதிமுக, திமுக, பாஜக., உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவில்லை. தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்ற அரசாணை ஒரு முற்றிலும் ஏமாற்று வேலை. எங்கள் சமூக மக்கள் மீதான அடக்கு முறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆதலால், தேவேந்திர குல சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றி பிற்பட்டோர் பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து தேவேந்திர குல மக்கள் ஆதிதிராவிடர் பட்டியலில் தான் தொடர வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கூறுகின்றன. எங்களால் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க முடியாது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத பாஜக., வை தமிழக சட்டசபை தேர்தலில் வீழ்த்துவதென சபதம் எடுத்துள்ளோம் என்றார்.