வாரிசு அரசியல் என்று நினைத்தால் மக்கள் என்னைத் தோற்கடிக்கட்டும்…- உதயநிதி ஸ்டாலின்

சென்னை,

வாரிசு அரசியல் என்று நினைத்தால் மக்கள் என்னைத் தோற்கடிக்கட்டும் என்று சேப்பாக்கம்திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அந்த கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி. அவர் முதல்முறையாக இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாகவும் எனவே தான் உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் ஆளுங்கட்சி தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதை பாருங்கள்.

குடியுரிமை திருத்த சட்டத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று சட்டமன்றத்தில் கூறியது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் . இப்போது, அதே அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததையா, இனி அவர்கள் செய்யப் போகிறார்கள். எம்எல்ஏ பதவி என்பது நியமன உறுப்பினர் பதவி கிடையாது. மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கும் பதவி. என்னை வாரிசு அரசியல் செய்வதாக மக்கள் நினைத்தால் என்னை தோற்கடிக்கட்டும், அல்லது என்னை வெற்றி பெற வைக்கட்டும். முடிவு மக்கள் கையில் இருக்கிறது.

 

குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தபோதுமுதல் அதை எதிர்த்து குரல் கொடுத்து வருவது திமுகதான். இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது நான்தான் முதன்முதலில் கைதானேன். நம்முடைய தேர்தல் அறிக்கையிலும், குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று தெளிவாகச் சொல்லி உள்ளோம். சிறுபான்மையினருக்கு அரணாகவும் காவலாகவும் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக, திறந்தவெளி ஆட்டோவில் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின். திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பகுதி செயலாளர் காமராஜ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!