விவசாயிகள் டெல்லியில் போராட அனுமதி! பணிந்தது மத்திய அரசு

விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய அனுமதி தந்துள்ள மத்திய அரசு, அமைதியாக போராட்டம் நடத்த வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அத்துடன், மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், டெல்லி நோக்கி டிராக்டர்களிலும், வாகனத்திலும் பேரணி செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி, விவசாயிகளின் வாகனப்பேரணி நேற்று டெல்லியை நோக்கு புறப்பட்டது. ஆனால், அவர்களை தடுத்த டெல்லி போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைந்துபோக செய்தனர். இதற்கெல்லாம் அசராத விவசாயிகள், இன்று 2வது நாளாக பேரணியை தொடர்ந்தனர்.

பேரணியில் வன்முறை ஏற்படாமல் தடுக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் இடையே அம்பாலா அருகே, போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல், டெல்லி காவல்துறையினர் விவசாயிகள் நகரத்திற்குள் நுழைவதைத் தடுக்க, சிங்கு மற்றும் திக்ரி எல்லைப் பகுதிகளில் முள்வேலி அமைத்திருந்தனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவதற்காக டெல்லிக்குள் நுழைய, பஞ்சாப் விவசாயிகள் அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, விவசாயிகள் புராரி மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, ராம்லீலா மைதானத்தில் தங்கள் போராட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரியிருந்தனர், ஆனால் டெல்லி காவல்துறை அந்த கோரிக்கையை மறுத்தது. விவசாயிகளின் எதிர்ப்பு தீவிரமானதால், வேறுவழியின்றி மத்திய அரசு இறங்கி வந்து, அவர்களின் போராட்டத்திற்கும் டெல்லியில் நுழையவும் அனுமதி தந்திருக்கிறது.

இதற்கிடையே டிசம்பர் 3ம் தேதி டெல்லியில் பஞ்சாபின் விவசாய அமைப்புகளை, மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

Translate »
error: Content is protected !!