கொரோனா தொற்றின் 2ம் கட்ட அலை பரவத் தொடங்கி இருப்பதால், பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் 2ம் கட்ட அலை, சில நாடுகளில் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்து பிரான்ஸ் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரான்ஸ் நாட்டிலும் 2ம் கட்ட அலை வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதையடுத்து, அதிபர் இமானுவேல் மெக்ரான் பிரான்ஸின் முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி பாரீஸ், மார்சீல்லி, டூலோஸ், லில்லி, லியான், ரோயன், மான்ட்பெலியர் உள்ளிட்ட நகரங்களில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அடுத்த 4 வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும்.
பிரான்ஸில் மட்டும் 7.56 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். 32,942 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.