சென்னை பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடாக ஆன்லைன் முறையில் தேர்வுஎழுதி பட்டம் பெற முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போர் தேர்வில் பங்கேற்க பல்கலைக்கழகம் வழங்கிய சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி தேர்வில் 1980-81 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் 2020ஆம் ஆண்டு ஆன்லைன் தேர்வெழுத வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், தொலைதூர கல்விப் பயிற்சி மையங்கள் ரூ.3 லட்சம் வரை பெற்று இந்த மோசடிக்கு உதவியது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பட்டப்படிப்பில் சேராமலேயே , ஆன்லைனில் தேர்வெழுதிய 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, வேறு யாராவது இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பதை கண்டறிய விசாரணை குழுவை அமைக்க சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.