சென்னை,
234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி நம் மீது விசுவாசம் வைத்துள்ளவர்களின் பணத்தை விரயமாக்க வேண்டாம் என தினகரனுக்கு சசிகலா அறிவுரை உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தமிழகம் தகித்தது. தற்போது கேட்க வேண்டுமா. தேதியும் அறிவித்தாச்சு, தொகுதி பங்கீடு உடன்படிக்கையில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தனித்து தனித்து போட்டியிடுவதால் ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதில் கட்சிகள் கவனமாக இருக்கின்றன.
அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. மக்கள் நீதி மய்யம் இன்னமும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என அறிவித்துவிட்டு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திவிட்டது. வரும் 7ஆம் தேதி ஒரே மேடையில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் அமமுகவின் நிலைப்பாடு என்னவென்பது கேள்வியாக உள்ளது.
அதிமுக கூட்டணியில் அமமுக இணைவது குறித்து பாஜக பேசி வருகிறது. இதை தினகரனும் விரும்புவதாக சொல்லப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த போது ஈபிஎஸ்– ஓபிஎஸ் மீது எந்த கோபமும் இல்லை. இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம் என்றார் தினகரன்.
ஆனால் அமமுகவை கூட்டணியில் சேர்த்து கொள்ள அதிமுக தயாராக இல்லை. இதனால் 3ஆவது அணி அமைக்க தினகரன் முயற்சித்து வருகிறார். எந்த கட்சி வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். ஆனால் நான்தான் முதல்வர் வேட்பாளர் என தினகரன் கூறி வருகிறார். இவர் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என அறிவித்துவிட்டதால் எப்படியும் தினகரன் தனது செல்வாக்கை அறிந்து கொள்ள 3ஆவது அணி அமைத்தோ இல்லை தனித்தோ போட்டியிடுவார் என்றே தெரிகிறது. ஆனால் சசிகலா இதை சற்றும் விரும்பவில்லையாம். மேலும் அதிமுகவை எதிர்ப்பதையும் கைவிடுமாறு கூறி வருகிறாராம்.
தனித்து போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்காது. அதிமுகவுக்கு செல்லாமல் நம்மையே நம்பியிருக்கும் தொண்டர்களை 234 தொகுதிகளிலும் நிறுத்தி அவர்களின் பணத்தை விரயமாக்க வேண்டாம் என சசிகலா அறிவுறுத்துவதாக தெரிகிறது.
கணிசமான வாக்குகள் கிடைக்கும் , ஆனால் வெற்றி கிடைக்கவே கிடைக்காது என்பது சசிகலாவின் வாதமாக உள்ளதாம். ஆனால் மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் வேட்பாளர்கள் நேர்காணலை தினகரன் நடத்துவதால் அவர் தனது முடிவில் பிடிவாதமாக இருப்பது தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக பல்வேறு இடங்களில் 2ஆவது இடத்திலும் இன்னும் சில தொகுதிகளில் 3 ஆவது இடத்திலும் வந்ததை அமமுக தொண்டர்கள் நினைவூட்டி நாம் நிச்சயம் வெல்வோம் என தினகரனை உற்சாகப்படுத்தி வருகிறார்களாம். இது எந்த அளவுக்கு தினகரனுக்கு கைக் கொடுக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.