12,ஆம் வகுப்பு பாஸ் போடுங்கய்யா, தேர்தல் பிரச்சாரம் செய்த ஓ.பி.எஸ்-ஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள், முதல்வருடன் கலந்து ஆலோசித்து உங்கள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.. அதனை தொடர்ந்து விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்க, நிறைவேற்றப்படும் என்ற ஓ.பி.எஸ், சமயம் பார்த்து அடிக்குறீங்களேப்பா என்றதால் கலகலப்பு.
தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று தான் போட்டியிடும் போடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.முதலாவதாக தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்பார்பட்டி, பாலகுருநாதபுரம், எஸ்.பி.எஸ் காலணி பகுதிகளில் திறந்த வெளி ஜீப்பில் நின்றவாறு மக்களிடம் பரப்புரை செய்த ஓபிஎஸ், பின்னர் சீலையம்பட்டியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சீலையம்பட்டியில் பேசிய ஓபிஎஸ், தமிழகத்தை காங்கிரஸ், திமுக ஆட்சி செய்துள்ளது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசு தான்.16ஆண்டு காலம் தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடு பட்டவர். அவரது அரசு தமிழகத்தில் இதுவரை 6.5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2,000 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இன்னும் 2,400 வீடுகள் கட்டித்தர பட உள்ளதாக தெரிவித்தார்.
பெண்கள் நாட்டின் கண்கள் என்று என்னியவர் ஜெயலலிதா, அதனால் தான் ஆறாயிரமாக இருந்த பேறுகால நிதியுதவி தற்போது 18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் அண்ணன்மார்கள் வாகனத்தை ஓட்ட, தங்கச்சிகள் பின்னால் உட்கார்ந்து செல்வார்கள். ஆனால் அம்மாவின் அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தால், தங்கச்சிமார்கள் ஓட்ட, அண்ணன்மார்கள் பின்னால் உட்கார்ந்து செல்கிறார்கள். இது தான் பெரியார் கண்ட கணவு. சமூக நீதியின் சோஷலிசம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படும் திட்டங்களை அறிவித்துள்ளோம். ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கையில் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அறிவித்துள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு கள்ள நோட்டு. அதிமுகவின் தேர்தல் அறிக்கையோ நல்ல நோட்டு என்று கூறினார்.
திமுக ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக இருந்த, ஆற்காடு வீராசாமி நல்ல மனிதர். அவர் சொன்னது பலிக்கும். மின்தட்டுப்பாட்டால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்றார். அது போல தற்போது வரை திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. என்றார். 2006 – 11 வரையிலான திமுக ஆட்சியில், தமிழகத்தில் 45000 கோடி ரூபாய் அளவில் தான் தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் பெறப்பட்டது.
ஆனால் அதிமுக ஆட்சியில் 6,85,000 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டு , 19லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளோம், இது ஒரு தொழிற்புரட்சி. அது போல விவசாயத்தில், நெல் சாகுபடியில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் மத்திய அரசின் கிரிஷி கர்மா விருதை தமிழகம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வேலைகள் துவங்கப்படவில்லை என ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் இன்று கூட மதுரையில் இருந்து நான் வரும் போது பார்க்கையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெறுகிறது இன்னும் ஓரிரு நாட்களில் வேலைகள் துவங்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக – காங்கிரஸ் ஆட்சியில் தான் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு 2016ல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக இளைஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த நான்.. அவர்களிடம் கேட்டுக் கொண்டும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
பிரதமரிடம் நிலைமையை எடுத்துக் கூறி ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை விலக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டதால், 24மணி நேரத்தில் 4அரசாணைகள் பெற்று ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதி பெறப்பட்டது. இதனால் இன்று ஜம், ஜம், ஜம்மென்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது என்றார்.
இதனிடையே கூட்டத்தில் இருந்த மாணவர்கள், அய்யா பன்னிரண்டாம் வகுப்பில் அனைவரையும் பாஸ் போடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு “உங்கள் கோரிக்கை பற்றி முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.!” என்றார் ஓ.பி.எஸ். தொடர்ந்து விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று இளைஞர்கள் கோரிக்கை வைக்க, “நிச்சயம் அமைத்துக் கொடுக்கிறேன்.!” என்றவர். “சமயம் பாத்து அடிக்குறீங்களேப்பா..!” என்றார். இதனால் கூட்டத்தில் பெரும் கரகோஷம் எழுந்தது .. இதையடுத்து கோட்டூர், தர்மாபுரி, பூமலைக்குண்டு, மல்லைய கவுண்டன் பட்டி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.