மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் – அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மழைநீர் பாதிப்பு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை ஆய்வு மேற்க்கொண்டார்.  அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சென்னையில் மழை பாதிப்பால் 66 ஆயிரம் மின் இணைப்புதாரர்களுக்கு மின் சேவை  நிறுத்தப்பட்டிருந்தது.  தற்போது வரை 38 ஆயிரம்  இணைப்புதாரர்களுக்கு   மின் சேவை  வழங்கப்பட்டுள்ளது எனவும்,  எஞ்சியிருக்கும் 28,ஆயிரம் வீடுகளுக்கு மின் சேவை மீண்டும் வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார். கடந்த 2015 ,2016 மற்றும் கடந்த ஆண்டுகள்  தடைபட்ட மின்சாரம் இரண்டு வார காலத்திற்கு பிறகே  சரி செய்யப்பட்டது எனவும், ஆனால் தற்போது மழை நின்ற உடன் மின்சாரம் சீர்செய்யப்பட்டு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மழை பாதிப்பால் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது எனவும்,  இதனை ஈடு செய்யும் விதமாக தூத்துக்குடி மற்றும் மேட்டூர்  மின் உற்பத்தி  நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது எனவும், இன்று பிற்பகல் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் கூறினார். மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை ,காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதிலிருந்து 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். இதுகுறித்த உத்தரவுகள் அந்தந்த மின்சார வாரிய அலுவலகங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறினார்.

Translate »
error: Content is protected !!