2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து வங்கதேசத்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி,

வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்த பிரிவினையை இந்தியா முன் நின்று நடத்தியது. இதன் காரணமாக இந்தியாவங்கதேசம் இடையே நல்ல நட்புறவு நீடித்து வருகிறது.

வங்கதேசம் சுதந்திரம் பெற்று இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அதை தேசிய தினமாக வங்கதேசம் கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை அவர் வங்கதேசத்துக்கு புறபட்டுச் சென்றார். கொரோனா காரணமாக கடந்த 15 மாதங்களாக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து இருந்தார்.

15 மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக வங்கதேசத்துக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வங்கதேச தலைநகர் டாக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் அங்கு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது

இன்றும், நாளையும் 2 நாட்கள் வங்கதேசத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இன்று வங்கதேசத்தின் தேசியதின விழா நடக்கிறது. அதோடு ஷேக் முஜிபூர் ரகுமானின் 100-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண் டாட்டமும் தொடங்கியது. இந்த விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

டாக்காவில் துங்கிபாரா பகுதியில் உள்ள முஜிபூர் ரகுமானின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். வங்கதேசத்தில் புகழ் பெற்ற காளிகோவில் உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றான அந்த கோவிலுக்கு நாளை (சனிக்கிழமை) சென்று பிரதமர் மோடி வழிபட உள்ளார். அங்கு பொது மக்களையும் சந்தித்து பேசுகிறார்.

வங்கதேச ஜனாதிபதி அப்துல் ஹமீது, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். அப்போது இந்தியாவங்கதேசம் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி வருகையையொட்டி அவர் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு ஏற்பாடுகளை வங்கதேச அரசு செய்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!