தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குரங்கனி, கொட்டகுடி, துவாக்குடி ஆகிய பகுதிகளில் இன்று மதியம் பெய்த கனமழையின் காரணமாக கொட்டகுடி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த திடீர் காட்டாற்று வெள்ளத்தால் கொட்டகுடி ஆறு செல்லும் அணைப் பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்த 4 பள்ளி மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள அணைக்கட்டு மதகின் மேல் பகுதியில் ஏறிக் கொண்டனர்.
அதன் பின் அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் 4 பள்ளி மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
போடி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் அந்த 4 மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியும், பெற்றோர்களை எச்சரித்தும் அனுப்பி வைத்தனர். மேலும் மிக குறைந்த நேரத்தில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட 4 பள்ளி மாணவர்களை மீட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.