வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக அறிவித்துவிட்ட நிலையில், தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளது; பாஜக 40 தொகுதிகள் கேட்பதால் அதிர்ந்து போன அதிமுக, 25 தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்ற நிலையில், தொகுதிப்பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக இடையே ஆலோசனைகள் தொடங்கி இருக்கின்றன.
சென்னையில் நேற்று நடந்த அரசு விழா முடிந்த பிறகு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமித்ஷாவிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
இதை தொடர்ந்து தொகுதி எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து, அமித்ஷாவிடம் அதிமுக தலைவர்கள் விவாதித்ததாக தெரிகிறது. பின்னர், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி, மூத்த தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு, கவுதமி, நமீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் அதிமுகவிடம் 40 தொகுதிகளை கேட்பது என்று முடிவெடுத்ததாக செய்திகள் கசிந்தன.
அதன் அடிப்படையில், அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் இருந்து 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகவும், இதை கேட்டு அதிர்ந்து போன அதிமுக, 25 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று அதிமுக கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு இரவு 11 மணியவில் தொடங்கிய இந்த ஆலோசனை, 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது, அதிமுக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றி முக்கியமாக பேசப்பட்டதாக தெரிகிறது.
பாஜக – அதிமுக கூட்டணிதான் முடிவாகிவிட்டதே; அரசியலுக்கு வராத நடிகர் ரஜினி பற்றி குருமூர்த்தியுடன் அமிஷா எதற்காக ஆலோசனை நடத்தினார் என்ற கேள்வி, அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.