உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6வது முறையாக தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகத்திற்கு வழங்கும் விருதினை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பெற்று கொள்கிறார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பை கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 12ந்தேதி மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். அதன் பயனாக, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது
கடந்த ஆகஸ்டு வரையில், தமிழகத்தில் 1,382 கொடையாளர்களிடம் இருந்து 8 ஆயிரத்து 163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன. ஏழை-எளிய மக்கள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5வது முறையாக தமிழகம் முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது.