தமிழகத்தில், மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மவுனம் கலைத்துள்ளார். இறுதி முடிவு எடுக்க 3 முதல் 4 வாரம் அவகாசம் தேவை என்று, அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு, ஆய்வு நடந்தது.
பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, நீதிபதி கலையரசன் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அதன் அடிப்படையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில், 7.5% உள்இட ஒதுக்கீடு வழங்க வகையில் செய்யும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
மேலும், தமிழக சட்டசபையிலும், கடந்த மாதம் 15ம் தேதி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அத்துடன் ஒப்புதலுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோக்கித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும், ஆளுநர் புரோகித் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில், உள்ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் முடிவை அறிவிக்காததால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்படாத நிலை உள்ளது.
இதனிடையே, அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவை கருத்தில் கொண்டு, உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
அத்துடன், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகை முன் அக்டோபர் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அனைத்து நிலைகளிலும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இறுதி முடிவு எடுக்க 3 முதல் 4 வாரம் அவகாசம் தேவை. கால அவகாசம் தேவை என்பதை தன்னை சந்தித்த அமைச்சர்களிடமும் விளக்கி இருக்கிறேன் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டிருந்த நிலையில், மருத்துவச் சேர்க்கை உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் புரோகித் தனது மவுனத்தை கலைத்துள்ளது, முக்கியத்துவம் பெறுகிறது.
—