கூட்டணி கட்சிகள் கடுமையாக வலியுறுத்தல்… திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது..?

சென்னை,

திமுக கூட்டணி கேட்கும் இடங்களை கொடுக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும்தான் இதுவரை, திமுக உடன் சட்டசபை தேர்தல் உடன்படிக்கை செய்து கொண்ட ஒரே மாஜி, மக்கள் நல கூட்டணியில் இருந்த கட்சி. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை இன்னமும் தொகுதி பங்கீடு செய்யவில்லை.

முன்பு, இவர்களோடு மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக அதிமுக பக்கம் போய் விட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கி உள்ளது திமுக. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்ட போதிலும் இது குறைந்த இடம் தான் என்று அதிருப்தி கட்சிக்குள் இருக்கிறது. ஆனால் சனாதன சக்திகளை வீழ்த்த வேண்டும் என்றால் திமுக கரங்களை வலுப்படுத்த வேண்டும்.

எனவே இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் திருமாவளவன். அதேநேரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் போன்றவை தங்கள் பிடியில் விடாப்பிடியாக இருக்கின்றன. இன்று மாலைக்குள் தொகுதி பங்கீடு பற்றி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் திமுக தலைமைக்கு வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதில் காங்கிரஸ் கட்சி கூட சில தொகுதிகளில் குறைத்துக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளது. மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் மிகவும் கறார் காட்டுகின்றன. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று.

2016ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் இந்த கட்சிகள் அமைத்த கூட்டணியின் காரணமாக திமுக சிறு இடைவெளியில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. இதனால் தொடர்ந்து பத்து வருடங்களாக திமுக ஆட்சியில் இல்லாத நிலை ஏற்பட்டது.

எனவே இப்போது தங்களை திமுக அனுசரித்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. திமுகவை தாங்கள் அனுசரித்துச் செல்ல வேண்டிய தேவையில்லை என்று இந்தக் கட்சிகளை சேர்ந்த பலரும் நினைக்கிறார்கள். கமல் கட்சி அவர்களின் கண் முன் வந்து போகிறது.

தனித்தனி கட்சிகளாக கூட்டணி பேரம் பேசினால் படியாது. ஒட்டுமொத்தமாக பழைய மக்கள் நல கூட்டணி கட்சிகள் இணைந்து ஒருவருக்கு ஒருவர் சிபாரிசு செய்யவேண்டும் என்பது அந்தத் தலைவர்கள் விருப்பமாக இருக்கிறது. திமுகவுடன் எப்படியாது கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்.

தங்களுக்காகத்தான் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள ஸ்டாலின் முயற்சி செய்யவில்லை என்பதை எல்லாம் திருமாவளவன் நன்கு அறிந்திருந்தார். இருப்பினும், மாஜி மக்கள் நல கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் தங்களுக்கும் சேர்த்து பேச வேண்டும் என்ற அழுத்தம் கொடுத்தால் தான் விடுதலை சிறுத்தைகள் தொகுதி பங்கீட்டில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இப்போது திருமாவளவன் தொகுதி பங்கீட்டில் கையெழுத்திட்ட பிறகு கூட்டணி கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கொண்டு தங்களுக்கு அதிக தொகுதிகளை வழங்க வேண்டும் என்று கேட்கின்றனர். லோக்சபா தேர்தலின்போது தலா ஒரு தொகுதி வழங்குவதாக திமுக தெரிவித்தது. ஆனால் மக்கள் நல கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒரே குரலில் கோரிக்கை வைத்ததால் இரண்டு தொகுதிகள் ஒதுக்கியது திமுக. அதே பாணியை இப்போது பின்பற்ற வேண்டும்.

ஒற்றுமையாக கேட்டால்தான் திமுக தலைமைக்கு அச்சம் இருக்கும் என்ற பார்முலாவை கையில் எடுத்துள்ளனர் மாஜி மக்கள் நல கூட்டணி கட்சிகள். திமுகவுக்குதான் இது மிக முக்கியமான தேர்தலே தவிர, தங்களுக்கு கிடையாது. திமுகவுக்கு கிட்டத்தட்ட இது வாழ்வா சாவா என்பது போன்ற தேர்தல். இதில் ஒரு சிறு கூட்டணி கட்சியை கூட இழக்க அது தயாராக இருக்காது.

எனவே நாம் விட்டுக் கொடுக்கத் தேவை கிடையாது என்பது இவர்களின் அடுத்த திட்டமாக உள்ளது. எனவே, ஒரு முடிவோடு இருக்கின்றனர் கூட்டணி கட்சியினர். ஆனால் கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால்தான் அதிக தொகுதிகளை ஒதுக்க முடியவில்லை என்பதுதான் திமுக தரப்பு வாதமாக இருந்து வருகிறது.

 

Translate »
error: Content is protected !!