மகளிர் சுய உதவி குழுக்களுக்காக தனி துறை உருவாக்கப்படும் – ஒடிஷா மாநில அரசு அறிவிப்பு

புவனேஸ்வர்,

மகளிர் சுய உதவி குழுக்களுக்காக தனி துறை உருவாக்கப்படும் என்று ஒடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த துறைக்கு டிபார்ட்மென்ட் ஆப் மிஷன் சக்தி என பெயரிடப்பட்டுள்ளது.

ஒடிஷாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தனி துறை அமைக்கப்படும் என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ல் அறிவித்திருந்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற ஒடிஷா அமைச்சரவை கூட்டத்தில் டிபார்ட்மென்ட் ஆப் மிஷன் சக்தி மற்றும் ஒடிஷா லைவ்லிகுட் மிஷன் ஆகிய துறைகளை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான யோசனையை பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை முன்வைத்தது.

இந்த புதிய துறையானது மகளிர் சுய உதவி குழுக்களை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும். ஒடிஷாவில் 2001-ம் ஆண்டு முதல் மகளிர் சுய உதவி குழுக்கள் கிராமப்புறம், நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது.

இதேபோல் ஒடிஷா சுரங்க கார்ப்பரேஷன் தம் வசம் இருக்கும் பாக்சைட் தாதுவை ஏலம் மூலம் வேதாந்தா குழுமத்துக்கு விற்பனை செய்யவும் ஒடிஷா அமைச்சரவை அனுமதி அளித்தது. ஒரு மெட்ரிக் டன் ரூ1,000 என்ற விலையின் அடிப்படையில் இந்த பாக்சைட் தாது விற்பனை செய்யப்படும்.

மேலும் எய்ம்ஸ் நிறுவனத்தின் சாட்டிலைட் மையம் அமைக்க அரசு நிலங்களை குத்தகைக்கு கொடுக்கவும் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிஷா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மொத்தம் 16 பரிந்துரைகளுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!