தனியார் துறை வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 75% இட ஒதுக்கீடு – திமுக அறிவிப்பு

சென்னை,

தமிழ்நாட்டில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கும் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

அதில் தமிழ்நாட்டில் தனியார் துறை வேலைகளில் தமிழர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கும் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட ஊதியத்திற்கும் கீழ் பெறும் வேலைகளில், அனைத்து தனியார் நிறுவனங்களும் 75% தமிழர்களையே பணியமர்த்த வேண்டும்.

ஏற்கனவே, ஹரியானா மாநிலத்தில் இதுபோன்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அங்கு ரூ. 50 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் உள்ள வேலைகளில் 75% அம்மாநில இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது,

அதேபோல ஜார்கண்டில் தனியார் வேலைவாய்ப்பில் அம்மாநில மக்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் இதேபோன்ற ஒன்றை திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!