பரபரப்பு… அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கிலிருந்து விலகிய டிடிவி தினகரன்..! அப்ப சசிகலா..?

சென்னை,

அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதேநேரம், சசிகலா தனது நிலைப்பாடு பற்றி தெரிவிக்க கால அவகாசம் கேட்டுள்ளார். சசிகலாவின் நிலைபாடு என்ன என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

இது குறித்து ஏப்ரல் 9ஆம் தேதி அவர் பதில் தெரிவிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சசிகலா எந்த முடிவையும் இப்போது தெரிவிக்காமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு, 2017 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பொதுச்செயலாளராக சசிகலா, துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு சசிகலா சிறை சென்றதும் 2017 செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அவர்கள் இருவரையும் கட்சியை விட்டு நீக்கி முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் இதற்கு தடை விதித்து, சசிகலாவை பொதுச் செயலாளர் மற்றும் தினகரனை துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்க வேண்டும் என்று இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றம் அதை உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்றியது. .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தான் துவங்கியுள்ளதால் இந்த வழக்கிலிருந்து விடுவித்து கொள்வதாக தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சசிகலா தரப்பின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதி கேட்டபோது அதுபற்றி ஆலோசிக்க உள்ளதாக சசிகலா தரப்பு தெரிவித்தது. எனவே இந்த வழக்கு ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக சசிகலா சமீபத்தில் அறிவித்தார். எனவே, அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கில் இருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இன்னும் யோசிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு கூறியுள்ளது. எனவே கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

சசிகலா அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை இந்த நடவடிக்கை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சி துவங்கி தேர்தலில் தினகரன் போட்டியிடுவதால் இந்த வழக்கில் அவர் மனுதாரராக இருப்பது சட்ட சிக்கல்களை உருவாக்கும் என்று சட்ட வல்லுனர்கள் அவருக்கு கூறிய யோசனையின் அடிப்படையில் வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலா இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்து விடும். ஏப்ரல் 9ம் தேதி தான் இனிமேல் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதாக சசிகலா அறிவிக்கக் கூடும் என்று சசிகலா தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அரசியலில் புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

 

Translate »
error: Content is protected !!