இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு 2024ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலுக்கு இப்போதே அடித்தளமிட்டு உள்ளது.
பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் மூலம் இரண்டு முறை தொடர்ந்து பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 2024 தேர்தலிலும் பெரிய அளவிலான வெற்றியை அடைய வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது. இதற்காக 3.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய திட்டத்தை மோடி அரசு கையில் எடுத்துள்ளது.
இந்திய மக்களுக்கான அடிப்படை வசதிகளான சமையல் சிலிண்டர், கழிப்பறை, மின்சாரம், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளை அளித்துப் பெருமளவிலான வாக்குகளைப் பெற்று இரண்டு முறை ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் தற்போது தண்ணீர் பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளார் மோடி.
இந்தியக் கிராமங்களில் இருக்கும் 19.2 கோடி வீடுகளுக்கும் பைப் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை அடுத்த 4 வருடத்திற்கு நிறைவேற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்கை மோடி தலைமையிலான அரசு நிர்ணயம் செய்துள்ளது. 19.2 கோடி வீடுகள் என்பது அமெரிக்காவில் இருக்கும் மொத்த வீடுகளை விடவும் மிகவும் அதிகமானது.
சுமார் 3.6 லட்சம் கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்படும் இத்திட்டம் மூலம் இந்தியக் கிராமங்களில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் பல கோடி மக்களின் அடிப்படை பிரச்சனையைக் களைய முடியும். இந்தியாவில் தற்போது வெறும் 7 கோடி இந்திய வீடுகளுக்கு மட்டுமே தண்ணீர் இணைப்பு உள்ளது.
இந்திய மக்களுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யாவிட்டால் socio-economic வளர்ச்சியில் பெரிய அளவில் பின்தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகும் எனக் குழாய் வாயிலான குடிநீர் விநியோகம் திட்டமான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் தலைவர் பார்த் லால் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் நாள் ஒன்றுக்குக் குறைந்தது 55 லிட்டர் குடிநீர் அளிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு.