சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவில் 3 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கையில் இது விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிடர் இயக்க காலம் தொட்டே சிறுபான்மை மக்களை சொந்த உறவுகளாக கொண்டாடுகிற போக்கு பல தலைமுறைகளாக பின்பற்றப்படுகிறது. அரசியல் ரீதியாக 1967-ல் திமுக ஆட்சி அமைக்க அன்றைக்கு கண்ணியமிகு காயிதேமில்லத் தலைமையில் இஸ்லாமியர்கள் பெருமளவு ஆதரவாக இருந்தனர்.
எம்ஜிஆர், அதிமுக கட்சியை தொடங்கிய போதும் கூட இரு திராவிட கட்சிகளுக்கும் இஸ்லாமிய கட்சிகள் ஆதரவாக இருந்தனர். 1980களில் இந்து முன்னணி உருவான போது அதற்கு எம்.ஜிஆர். காட்டிய ஆதரவு, மீனாட்சிபுரம் மதமாற்ற விவகாரத்தில் அதிமுக அரசு நடந்து கொண்ட விதம், விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு அனுமதி என்கிற வலதுசாரி அல்லது இந்துத்துவா ஆதரவுப் போக்கு மெல்ல மெல்ல சிறுபான்மையினரை அதிமுகவிடம் இருந்து பிரித்தது.
இதேகால கட்டத்தில் சிறுபான்மையினருக்கான ஒற்றை நம்பிக்கையாக திமுகவும் இருந்து வந்தது. ஆனாலும் திமுகவின் நிர்வாக கட்டமைப்பில் பொருளாளர் சாதிக்பாட்ஷாவுக்குப் பின்னர் பெரிய அளவுக்கு முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லையே என்கிற ஆதங்கமும் இருந்தது. 1990களின் தொடக்கத்தில் பாபர் மசூதி இடிப்புக்குப் பின் இஸ்லாமிய அடிப்படைவாதம் தமிழகத்தில் தலைதூக்கியது. அதுவும் திமுக ஆட்சியில் இருந்த 1998-ல் கோவையை நாசமாக்கிய பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது போலீசார் கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறையால் திமுக மீது முஸ்லிம்களுக்கு கடுமையான அதிருப்தி உருவானது. இருப்பினும் இந்த அதிருப்தியை பின்னாளில் இஸ்லாமியர் உள் இடஒதுக்கீடு மூலம் சமன் செய்தார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. இதேகால கட்டத்தில் பாரதிய ஜனதா எனும் தீவிர இந்துத்துவா கட்சி விஸ்வரூபம் எடுத்து வளர்ந்த நிலையில் சிறுபான்மை சமூகத்துக்கு ஒற்றை ஆதரவு களமாக திமுகதான் இருந்தது.
இதே திமுகதான் 4 பாஜக எம்.எல்.ஏக்க்களை சட்டசபைக்கு அனுப்பி வைத்தது என்பதையும் மறக்காமலேயே.. இப்போதும் திமுகவில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.. ஆனால் அவர்களுக்கான முக்கியத்துவம் என்பது பெரிய அளவில் இல்லை என்கிற ஆதங்கம் தொடருகிறது. உதாரணமாக திண்டுக்கல் நகரில் மூத்த திமுக தலைவர்களில் ஒருவரான பஷீர் அகமது, மக்கள் செல்வாக்கு பெற்றவர்தான். எங்கே அவர் அரசியலில் ஏற்றம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே சிலபல உள்ளடிகள் வேலை பார்த்து அவர் தேர்தல் களத்தில் வெல்ல முடியாத நபராகவே உருவகப்படுத்துவிட்டார்.
இதே திண்டுக்கல்லில் மாநில மகளிர் அணி புரவலாக மறைந்த நூர்ஜஹான் பேகம் இருந்தார். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் சிறுபான்மையினர் ஏற்றம் பெற்றவர்களாக சுருக்கப்பட்டுவிட்டனர். மாநில நிர்வாகிகள் நியமனங்களில் பெரும்பாலும் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுவது தொடருகிறது.
அதுவும் சட்டசபை தேர்தல்களில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என்ற நிலையை நோக்கி செல்கிறது திமுக. தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப கணக்கு பார்த்தாலே சட்டசபையில் குறைந்தபட்சம் 10 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் இருக்க வேண்டும். 2006-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் சட்டசபையில் மொத்தம் 7 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இவர்களில் திமுகவை சேர்ந்தவர்கள் 5 பேர்; அதிமுக– 1; காங்கிரஸ்– 1.
2011 சட்டசபை தேர்தலின் போது திமுக 10 முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தியது; அதிமுக 5 வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் 2 வேட்பாளர்களும் உள்ளடக்கம். மொத்தம் 5 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள்தான் வெற்றி பெற்றனர். 2016 சட்டசபை தேர்தலில் திமுக– அதிமுக ஆகியவை மொத்தம் 10 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தின. மொத்தம் 5 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள்தான் வெல்ல முடிந்தது.
தற்போதைய தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் இருக்கிறது. அதனால் முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படவில்லை. முஸ்லிம் கட்சிகளுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கிய திமுக சொந்த கட்சியில் வெறும் 3 முஸ்லிம்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறது. இவர்களில் வெல்லப் போவது எத்தனை பேர் என்றும் தெரியாது. இதனால் சட்டசபையில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது படிப்படியாக குறைந்து வருகிறது.
இப்படியான ஒரு நிலைமைதான் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தது. இதனால் முஸ்லிம்களின் பிரதிநிதிகளுக்காக நாங்கள் களம் காண்கிறோம் என ஓவைசி கட்சி பீகார் தேர்தலில் போட்டியிட்டு 5 எம்.எல்.ஏக்களைப் பெற்றது. தற்போது திமுகவைத்தான் முஸ்லிம்கள் அதிகமாக நம்பி இருக்கின்றனர். அந்த திமுகவே முஸ்லிம் வேட்பாளர்களை கணிசமாக நிறுத்த மறுக்கும் போது இயல்பாகவே ஓவைசி கட்சி உள்ளிட்ட முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துகிற கட்சிகளின் குரல்கள் வலிமையடையும். இது திமுகவின் வாக்கு வங்கியை மிகக் கடுமையாக அல்லது மோசமாக பாதிக்கும் என்பதுதான் அரசியல் பார்வையாளர்கள் கருத்து..,