திமுக முப்பெரும் விழாவில் ‘பெரியார் விருது’ பெற்ற (மறைந்த) மா.மீனாட்சிசுந்தரம் திருவுருவப் படத்தை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்ரு திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:
கொரோனாவில் கொள்ளையடிக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் வேலை இழந்திருக்கிறார். அவர்களுக்கு 5000 ரூபாய் ரொக்கமாகக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். தமிழக அரசு இதை கேட்கவில்லை.
அறுவடை செய்த நெல் மழையில் அழிந்து போகிறது – நெல்லை வாங்க நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை. நெல்லுக்குரிய விலையும் கொடுக்கவில்லை. அதேநேரம், விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச விலையையும் ரத்து செய்யும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்திருக்கிறது அ.தி.மு.க.
மருத்துவம் மற்றும் மருத்துவ மேல் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது.
இந்த ஆண்டே இந்த ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது – மத்திய பா.ஜ.க. அரசு இந்த ஆண்டு 27 சதவீதமும் கொடுக்க முடியாது; 50 சதவீதமும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டிலிருந்து 10 சதவீதத்தை எடுத்து முன்னேறிய வகுப்பினருக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
இடஒதுக்கீட்டிற்கு எதிரான மத்திய பா.ஜ.க. அரசு. விவசாயிகளுக்கு எதிரான மத்திய பா.ஜ.க. அரசு. இடஒதுக்கீடு உரிமை பறிபோவதைத் தட்டிக் கேட்க முடியாமல் – விவசாயிகள் விரோத திட்டங்களை அ.தி.மு.க. அரசு ஆதரிக்கிறது ” என்று ஸ்டாலின் பேசினார்.