நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு போயஸ் கார்டனுக்கு சென்ற சசிகலா.. ஏன்.?

மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு போயஸ் கார்டனுக்கு இன்று (மார்ச் 24) சென்றுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததால், 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி போயஸ் கார்டனிலிருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்றவர், நான்கு வருடங்கள் சிறைத் தண்டனையை முடித்துவிட்டு 2021 பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னைக்குள் காலெடுத்து வைத்தார்.

தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டில் இருந்து வந்த சசிகலா திடீரென மார்ச் 3ஆம் தேதி அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக அறிவித்தார். எனினும் தினகரன் கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார்.

தமிழகம் வந்த ஐந்து வாரங்களுக்குப் பிறகு குல தெய்வத்தை வணங்குவதற்கு கடந்த 17ந் தேதி தஞ்சாவூர் சென்ற சசிகலா, நடராஜன் சகோதரர்கள் பிள்ளைகளின் காதணி விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திவிட்டு, கணவர் நடராஜன் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு வீடு வந்தார்.

திருவிடைமருதூர் சிவன் கோயில் குருக்கள் ஒருவர் 18ஆம் தேதி, சசிகலாவைச் சந்தித்து பிரசாதம் கொடுத்தவர். “உங்கள் கண்ணீரும் மனவேதனையும் உங்களுக்கு துரோகம் செய்தவர்களை சும்மாவிடாதும்மா. அதற்குத்தான் குலதெய்வத்தை வணங்கிட்டு போங்கள் என்று வரச்சொன்னேன்என்று கூறியுள்ளார்.

தஞ்சையிலிருந்து 19ஆம் தேதி சென்னைக்கு வந்தவர் இன்று போயஸ் கார்டனுக்கு போகத்திட்டமிட்டார். நேற்று இரவே தனது உதவியாளரிடம் தெரியப்படுத்திவிட்டார். அதன்படி இன்று மார்ச் 24ஆம் தேதி, காலையில் 6.30 மணிக்கு அபிபுல்லா சாலையிலிருந்து புறப்பட்டு, போயஸ் கார்டனில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் தரிசனம் செய்தார்.

பின்னர் ஜெயலலிதாவுடன் தான் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டு வாசல் வழியாக சென்றார். போயஸ் கார்டன் ஜெயலலிதா வீடு அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டதற்கு பிறகு அங்கு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை.

இந்நிலையில் வேதா நிலையம் வீட்டைப் பார்த்தபடி பின் பக்கம் வந்தவர், இடப்பக்கம் உள்ள சிவன் கோயிலில் தரிசனம் செய்தார். தனக்காக புதியதாகக் கட்டப்பட்டுவரும் பங்களாவை வெளியிலிருந்தபடி மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார் சசிகலா.

இந்த நகர்வுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது ஒரு முன்னோட்டம்தான் சசிகலாவை வேண்டாம் என்றவர்கள் விரைவில் வேண்டும் என்று சொல்வார்கள். அது நிச்சயம் நடக்கும்என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

Translate »
error: Content is protected !!