இந்தியா பொருளாதார வல்லரசாகி வருவதாக ஆட்சியாளர்கள் கூறி வந்தாலும், உலக பட்டினி நாடுகள் தரவரிசை குறியீட்டில் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைவிட இந்தியா பின்தங்கி இருப்பதாக, ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து, பொருளாதார வல்லரசு என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. எனினும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் இந்த பிம்பம் நொறுங்கத் தொடங்கிவிட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதை உறுதிப்படுத்துவது போல், பட்டினி நாடுகள் தரவரிசை குறியீட்டில் இந்தியா மிக மோசாமான நிலையில் இருக்கும் உண்மை, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் நாடுகள் ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கை, பொதுவினியோக முறை, உணவுப்பற்றாக்குறை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு, வெல்த் ஹங்கர் ஹைல்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்ட்வைட் இணைந்து உலக பட்டினி நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், சின்னஞ்சிறு அண்டை நாடான நேபாளம் 73வது இடத்திலும், வங்கதேசம் 75 இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் 88வது இடத்திலும் உள்ளது. ஆனால், இந்தியாவோ இதில், 94வது இடத்தில் உள்ளது. எனினும், கடந்த ஆண்டு 102வது இடத்தில் இருந்த இந்தியா இம்முறை, 8 இடங்கள் முன்னேறி 94வது இடத்தில் உள்ளது என்ற வகையில் ஆறுதல் அடையலாம்.
இந்தியாவில் பட்டினியாக வாழும் மக்களின் விகிதம் மிகவும் கவலைதரும் வகையில், 27.2% என்று இருப்பதாக, அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது. சின்னஞ்சிறு நாடுகள் கூட பட்டினி குறைப்பு விகிதத்தில் முன்னேறியுள்ள நிலையில், இந்தியா பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.-