சிறைக்கைதிகள் வாக்களிக்க முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது ஒரு அலசல்தமிழகத்தில் இம்மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் கோடிக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
வாக்களிக்கும் தேதியான ஏப்ரல் 6ம் அன்று அரசு ஊழியர்கள், காவல் ஆளிநர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவதால் அவர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இச்சூழ்நிலையில் சிறையில் உள்ள கைதிகள் வாக்களிக்க முடியுமா என்பது அனைவர் மனதிலும் தொக்கி நிற்கும் ஒரு கேள்வியாக உள்ளது. அது தொடர்பான ஒரு அலசல் இதோ!
தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகளும், ஒரு மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியும், மூன்று பெண்கள் தனிச்சிறைகளும், மாவட்ட சிறைகள், திறந்த வெளிச் சிறைகள் மற்றும் கிளைச் சிறைகள் என மொத்தம் 138 சிறைச் சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மத்திய சிறைகள் 9, மற்றவை 126ம் கிளைச்சிறைகள் ஆகும். இந்த சிறைகளில் மொத்தம் சுமார் 15,416 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 15,416 கைதிகளும் வாக்களிக்க தகுதியானவர்களா என்றால் இல்லை. இவர்களில் வெறும் 14 பேர்தான் வாக்களிக்க தகுதியானவர்கள் என சிறைத்துறை தரப்பு கூறுகிறது. அது தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கைதிகள் ஓட்டுப்போடுவதற்கு சட்டத்தில் இடம் இல்லை. அப்படி அவர்கள் வாக்களிக்க விரும்பினால் தங்கள் விருப்பத்தை மட்டுமே சிறைத்துறை அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.
ஆனால் கைதிகள் யாருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை. அந்த வகையில் குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு வாக்குரிமை உண்டு. தபால் மூலம் அவர்கள் தங்கள் ஓட்டுரிமையை நிறைவேற்றலாம். தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 1,571 கைதிகளில் தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் 14 பேர் மட்டுமே. அவர்கள் தற்போது வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் 9 மத்திய சிறைகள் மற்றும் சப்ஜெயில்களில் உள்ளனர்.
அது தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களது பெயர், முகவரி, தகுதிகள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ம் தேதியன்று தகுதியுள்ள கைதிகள் தங்கள் வாக்குரிமையை தபால் மூலம் செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது’’. இவ்வாறு சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, ‘‘சென்னை புழல் மத்திய சிறை2ல் 368 பேரும் அது தவிர மத்திய சிறைகளான திருச்சி 225, வேலுார் 201, கோவை 147, மதுரை 178, சேலம் 141 கைதிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் புதுமுக கைதிகளுக்கு மட்டுமே ஓட்டளிக்கும் உரிமை உஉண்டு. மேலும் வாக்களிக்க உரிமை பெற்ற 14 கைதிகளில் 5 பேர் கோவை மத்திய சிறையிலும்.
கடலுாரில் 7 பேரும், பாளையங்கோட்டை 1 , புழல் 1 என உள்ளனர். மேலும் ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும்படி 1997ம் ஆண்டு கைதிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அந்த மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது’’ என்றார்.
சிறைக்கைதிகள் வாக்களிப்பது தொடர்பாக பிரபல பெண் வழக்கறிஞர் சுதாராமலிங்கம் கூறுகையில், ‘‘கைதிகள் என்பவர்கள் ஒரு குற்றத்தை செய்து விட்டு சிறைக்கு வந்தவர்கள். கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்ட அவர்கள் எப்படி வெளியில் சுதந்திரமாக வாழ முடியாதோ அது போலத்தான் அவருக்கு ஓட்டுரிமையும் கிடையாது. ஓட்டு போடும் உரிமையும் அதில்தான் அடங்குகிறது.
ஆனால் அந்த கைதி ஒரு அப்பாவி, நிரபராதி என்னும் பட்சத்தில் அவருக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்க முடியும். ஐக்கிய நாடுகளில் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. கைதிகளை ஓட்டுப்போட வைக்க வேண்டும், அந்த உரிமையை வழங்க வேண்டும் என ஐக்கிய
நாடுகள் வலியுறுத்தின. அந்த கோரிக்கையை பல நாடுகளும் ஆதரித்துள்ளன. ஆனால் இந்திய சுப்ரீம் கோர்ட்டும், உயர்நீதிமன்றங்களும் பிரிவு 62 (5)ன்படி (பொதுமக்கள் பிரதி நிதித்துவச் சட்டம்) கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை குறித்து உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் கைதிகளுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கருத்தை நான் ஆதரிக்கிறேன். நீதிமன்றங்கள் இது தொடர்பான விதிமுறைகளை தளர்த்தாமல் இருப்பது வருந்துவற்குறிய விஷயம்.
வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், ‘‘ஐரோப்பிய நாடுகள், பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சிறைக் கைதிகளுக்கு ஓட்டுரிமை வழங்கியுள்ளது. இதே போல இந்தியாவிலும் வருங்காலத்திலும் நடை முறைப்படுத்தப்படவேண்டும்’’ என தெரிவித்தார்.