வெற்றி பெறுவோம்… நம்பிக்கை உள்ளது..அந்த பதவி அளிப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும் – உதயநிதி

சென்னை,

வரும் காலங்களில் தனக்கு அமைச்சர் பதவி அளிப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காலை ஏழு மணி முதல் தமிழகம் முழுவதும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் சற்று மெதுவாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி வேட்பாளருமான உதயநிதியும் ஸ்டாலினுடன் சென்று, தனது வாக்கைப் பதிவு செய்தார். அதற்கு முன், அவர்கள் மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, நான் எனது தேர்வை எழுதிவிட்டேன். மக்கள்தான் இனிமேல் முடிவு செய்ய வேண்டும். அனைத்து வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். எனக்கும் அந்த நம்பிக்கை உள்ளது. மக்கள் இந்த தேர்தலில் என்னை மிகப் பெரியளவில் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வரும் காலத்தில் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த உதயநிதி, இதை திமுக தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது, எனக்கு அமைச்சர் பொறுப்பைக் கொடுக்கலாமா என்பது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டசபை தேர்தலிலும் தமிழ்நாடு முழுவதும் உதயநிதி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். திமுக சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது வாரிசு அரசியல் குறித்து பலரும் விமர்சித்ததற்குப் பதிலளித்த அவர், தான் தேர்தலில் மட்டுமே நிற்பதாகவும் மக்கள் தங்கள் முடிவைத் தேர்தலில் தெரிவிக்கட்டும் என்று பதிலிளித்தார்.

 

Translate »
error: Content is protected !!