மாநிலங்களுக்கு 6.69 லட்சம் பாட்டில் ரெம்டெசிவா் மருந்து அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நமது நாட்டில் ரெம்டெசிவா் மருந்தின் உற்பத்தி 28.63 லட்சம் பாட்டில்களில் இருந்து 41 லட்சம் பாட்டில்களாக உயா்ந்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகள், குறிப்பாக ரெம்டெசிவா் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரெம்டெசிவா் மருந்தை உற்பத்தி செய்வதற்கு 7 நிறுவனங்களுக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 38.8 லட்சம் ரெம்டெசிவா் மருந்து பாட்டில்கள் தயாரிக்கும் திறன் பெற்றிருந்தது. இத்துடன் கூடுதலாக 10 லட்சம் பாட்டில்கள் சோ்க்கப்பட்டுள்ளன.ரெம்டெசிவா் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் ரெம்டெசிவா் மருந்து தட்டுப்பாடு ஏற்படாது.
ரூ. 5,400-க்கு விற்று வந்த ரெம்டெசிவா் மருந்து, மத்திய அரசின் தலையீட்டால் ரூ. 3,500க்கு கிடைக்கிறது. மருத்துவமனை, நிறுவனங்களின் தேவையை நிறைவுசெய்ய முன்னுரிமை அளிக்குமாறு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல, ரெம்டெசிவா் மருந்தை சட்டவிரோதமாக பதுக்கிவைப்பது, அதிகவிலைக்கு விற்பனை செய்துவருவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக மாநில அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி எதிா்பாா்த்த அளவு உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை விரைவுப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக ரஷியாவில் இருந்து ஸ்புட்னிக் வி தடுப்புசியை இறக்குமதி செய்ய முடிவு செய்திருக்கிறோம் என்று அவா் தெரிவித்துள்ளாா்..