திமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் திட்டங்கள் முன்னெடுக்க திமுக தலைமைத் திட்டமிட்டிருக்கிறது.
அதற்கு வசதியாக, அதிமுக ஆட்சியில் ஓய்வுக்குப் பிறகும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு கோலோச்சும் அதிகாரிகள், அலுவலர்கள் பலரையும் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை கையிலெடுக்கவிருக்கிறது திமுக தலைமை.
இதற்காக அனைத்து துறைகளிலும் சில பல புள்ளிவிபரங்களை தொகுத்து வருகின்றனர். முதல்வரின் சிறப்பு பணி அலுவலர் என்கிற பதவியில் இருக்கும் எழிலழகன், ஓய்வுப் பெற்று 7 வருடங்களாக அரசு பணியில் இருந்து வருகிறார். சிறப்புச் செயலாக்கத்துறையில் மக்கள் தொடர்பு அலுவலராக சச்சிதானந்தம் இருந்து வருகிறார். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று கடந்த 18 வருடங்களாக ஆகிறது.
ஒய்வு பெற்ற பிறகு திமுக ஆட்சியில் 2 வருடங்கள் கோ–ஆப்டெக்ஸில் பணிபுரிந்த இவர், அதிமுக ஆட்சியில் நீண்ட வருடங்களாக இப்போதும் பணிபுரிந்து வருகிறார். அவர்க்கு தற்போது 75 வயதாகிறது. செய்தித்துறையின் துணை இயக்குநராக இருந்த உன்னிக்கிருஷ்ணன், ஓய்வுப்பெற்று இரண்டு வருடங்கள் ஆகிறது. ஓய்வு பெற்ற உடனேயே கேரளாவிலுள்ள வைக்கம் நினைவகத்தின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டு இப்போதும் பணியில் நீடித்து வருகிறார்.
தமிழக அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சபரிமலைக்கு வரும்போது அவர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வது தவிர வேறு வேலை எதுவும் உன்னிக்கிருஷ்ணனுக்கு கிடையாது. எழிலழகனின் நெருங்கிய நண்பரான வெங்கடசுப்பிரமணியம் ஓய்வுப் பெற்று 14 வருடம் ஆகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசின் பொருட்காட்சி பிரிவில் கணக்கராக தற்போதும் இருந்து வருகிறார்.
இப்படி செய்தித்துறையின் அதிகாரிகள் பலருக்கும் , ஓய்வுபெற்றதும் ஒப்பந்த அடிப்படையில் அதிமுக ஆட்சியில் மீண்டும் பணி வழங்கப்பட்டது. இப்படி நியமிக்கப்பட்ட அனைவரையும் அதிரடியாக நீக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதனையறிந்த செய்தித்துறையின் அதிமுக ஆதரவு அதிகாரிகள், திமுகவில் வலிமையாக உள்ள மூத்த தலைவர்களை அணுகி வருகிறார்கள். அவர்களது உதவியுடன் மீண்டும் நல்ல பதவியில் அமர்வதற்கான காய்களை நகர்த்தி வருகின்றனர் என்கிறது அறிவாலயம் தரப்பு.